தகர் என்ற பெயரில் நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பு

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தகர் என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (02.09.2014) அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அளவெட்டிப் பகுதியில் வசிக்கும் கணவர்களை இழந்த 32 பெண்களுக்கு சணல் என்று அழைக்கப்படும் சாணன் இன ஆடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான இந்த ஆடுகளை சுவிற்சர்லாந்தில் வசிக்கும்; ப. விஜயகுமார் என்பவரும், இலங்கையின் முதலாவது கிராமசபைத் தலைவியும் நெடுந்தீவு வாசியுமான அமரர் நாகேந்திரர் செல்லம்மா ஞபாகார்த்தமாக அவரது உறவினர்களும் கொள்வனவு செய்து வடக்கு மாகாண கால்நடை அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

திட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடு ‘தகர்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளது. அதனைத் திட்டத்தின் பெயராகவும், ‘தகர் வளர் துயர் தகர்’ என்பதைத் திட்டத்தின் மகுட வாசகமாகவும் கொணட இந்த ஆடு வளர்ப்புத் திட்டம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்வதோடு நல்லின ஆடுகளை விருத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.

இந்தத் திட்டம் வடமாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படவுள்ளதால் திட்டத்தை முன்னெடுப்பதற்குப் புகலிட நாடுகளில் வசிக்கும் எமது ஈழதேசத்து உறவுகள் இங்குள்ள அவர்களது உறவுகளுக்கு ஊடாக உதவ முன்வரவேண்டும்; என்று கேட்டுக்கொண்டார்.

பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், ஆடுகள் சண்டையிடும்போது பின் வாங்குவது திருப்பித் தாக்குவதற்கு வேகம் பெறுவதற்காகவே. இதனையே திருவள்ளுவர் தனது திருக்குறளில் காலம் அறிதல் என்ற அதிகாரத்தில் ‘ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பொருதகர் போன்றே நாம் இப்போது பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் எதிர்காலத்தில் நிச்சயமாக நன்மை அடைவோம். அந்தவகையில் தகர் என்று பொருத்தமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட எமது பெண்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடையும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் த. சித்தார்த்தன், பா. கஜதீபன், திருமதி அனந்தி எழிலன், விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்கள் திருமதி வக்சலா அமிர்தலிங்கம், செல்வி கிறிஸ்ரன் புஸ்பலேகா மரியதாஸ், வலிவடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆடுகளைக் கொள்வனவு செய்து உதவிய செய்த ப. விஜயகுமாரின் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியின்போது வடமாகாண முதலமைச்சரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

Related Posts