டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் என்ற தலித் மாணவர், திங்கள்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார்.

திங்கள்கிழமை பிற்பகல் முனிர்காவில் உள்ள தனது நண்பரின் அறைக்குச் சென்ற அவர், அங்கு உணவு சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அங்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறி, நண்பரின் ஓர் அறைக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் அந்த அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, டெல்லி தெற்கு பகுதி கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சின்மய் பிஸ்வால் கூறும்போது, மாலை 5 மணிக்கு போலீசாருக்குத் தகவல் வந்ததாகவும், அங்கு சென்று பார்த்தபோது நண்பரின் அறைக்குள் பூட்டிக்கொண்டு, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் என்று தெரிவித்தார்.

கதவை உடைத்து போலீசார் அவரது சடலத்தை மீ்ட்டனர். தற்கொலை தொடர்பாக எந்தக் குறிப்பையும் அவர் விட்டுச் செல்லவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீஸ் துணைக் கமிஷனர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கடந்த 10-ஆம் தேதி, ரஜினி கிருஷ் என்ற பெயரில் உள்ள அவரது முகநூல் பக்கத்தில் சில கருத்துக்களை அவர் பதிவிட்டுள்ளார். அதில், “எதிலும் சமத்துவம் இல்லை. எம்.ஃபில், பி.எச்டி அட்மிஷனில் சமத்துவம் இல்லை. நேர்காணலில் சமத்துவம் இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்பட்டால் எல்லாமே மறுக்கப்படுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அவரது நண்பர்கள் சிலர் கூறும்போது, பிற்பகல் அவர் மகிழ்ச்சியான மனநிலையில்தான் இருந்ததாகவும், ஹோலிப் பண்டிகை கொண்டாடியதாகவும், திடீரென அவர் உயிரிழந்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.

இவர், ஹைதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

எனினும் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை ஜீவானந்தம் தெரிவித்தார். ஜீவானந்தத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது மகன் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன் என்றும், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல என்றும் தெரிவித்தார்.

மகனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறிய அவர், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

“இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசினார். தேர்வு இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு பேசவில்லை” என்றார்.

“படிப்பதைத் தவிர வேறு எந்தப் பிரச்சனைக்கும் செல்ல மாட்டார். தகுதி அடிப்படையில்தான் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. நன்றாகப் படிப்பவர். நான் காவலாளியாகப் பணியாற்றுகிறேன். அவர் படித்து முடித்துவிட்டு வந்தால் எங்களுக்கு வாழ்க்கை கிடைக்கும் என்று நினைத்தோம்” என்றார்.

“அவரது சாவில் மர்மம் உள்ளது. எனக்கு நியாயம் வேண்டும்” என்றார் முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம்.

Related Posts