டெலோவின் 8ஆவது தேசிய மாநாடு யாழில்

teloதமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8ஆவது தேசிய மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதென இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8ஆவது தேசிய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தலைவர்கள், செயலாளர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கான சாத்வீக ரீதியான உரிமைப் போராட்டத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்களும் செயலாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாவட்ட ரீதியாக மாவட்ட பொதுக்குழு அங்கத்தவர்களும் மாவட்ட செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்ட செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், கட்சியின் பொதுக்குழு அங்கத்தவர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இதற்கான தெரிவுகள் 16ஆம் திகதி திருகோணமலையிலும் 17ஆம் திகதி அம்பாறைஇயிலும் 18ஆம் திகதி மட்டக்களப்பிலும் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 20ஆம் திகதி மன்னாரிலும் 21ஆம் திகதி வவுனியா மற்றும் முல்லைத்தீவிலும்; மேற்கொள்ளப்படவுள்ளன.

அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன், உபதலைவர் பிரசன்னா இந்திரகுமார், தலைமைக்குழு உறுப்பினர் எம்.சிறிகாந்தா, கட்சியின் சுவிஸ்ஸிலாந்து நாட்டின் பிரதிநிதி நித்தியானந்தம் ஆகியோர் இணைந்து இத்தெரிவுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கட்சியின் சர்வதேசப் பிரதிநிதிகளும் விசேடமாக கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கமைய கடந்த வாரம் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின்போது கட்சியின் யாப்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனை செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தேர்தல் ஆணையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இம்மாநாட்டின்போது அரசியல் ரீதியாக பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன’ என்றார்.

Related Posts