இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான விஷயம் வருமாறு:-
2003-ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர்-6 சுற்றில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நடந்த சம்பவம் இது. இதை சொல்லவே கொஞ்சம் தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆட்டத்திற்கு முன்பாக எனக்கு திடீரென கடுமையாக வயிற்று போக்கு ஏற்பட்டது.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு அதில் இருந்து ஓரளவு தான் குணமடைந்து இருந்தேன். அதற்குள் வயிற்று கோளாறு பிரச்சினை வந்து விட்டது. இதனால் அதிகமான ‘இஸ்டோனிக்’ பானங்களை அருந்தினேன். மேலும் சக்தி அளிக்கும் பானத்துடன் உப்பு கலந்தும் குடித்து பார்த்தேன்.
ஆனால் வயிற்று வலி தணியவில்லை. இதனால் வேறு வழியின்றி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய போது, எனது உள்ளாடைக்குள் ‘டிஷ்யூ பேப்பர்’ வைத்துக் கொண்டேன். ஆனாலும் களத்தில் என்னால் சவுகரியமாக செயல்பட முடியவில்லை. ஒரு குளிர்பான இடைவேளையின் போது ஓய்வறைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எப்படியோ இந்த ஆட்டத்தில் 97 ஓட்டங்களை (120 பந்துகள்) எடுத்து விட்டேன். வயிற்று வலியுடன் துடுப்பெடுத்தாடிய மோசமான ஒரு அனுபவமாகும். எனது திறமையை குறிப்பிட்ட அளவுக்கு தான் வெளிப்படுத்த முடிந்தது. இருப்பினும் நல்ல பலன் கிடைத்தது (183 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி) மகிழ்ச்சி அளித்தது, என்றார்.