டிவில்லியர்சால் இதயம் படபடத்தது – விராட் கோஹ்லி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை வகிக்கிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராத்கோலி 140 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

koly-virat-1

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கோலி அடிக்கும் முதல் சதம் ஆகும். மேலும் ரெய்னா 53, ரகானே 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சில் ரபடா, ஸ்டெயின் தலா 3 வீக்கெட் வீழத்தினர். இதனையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 3, ஹர்பஜன் 2, மோகித்சர்மா, அக்சர் பட்டேல், மிஸ்ரா தலா ஒரு விக்கெட் விழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது போட்டி வரும் 25-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
ஆட்டநாயகன் விருது பெற்ற கோஹ்லி கூறியதாவது: பெரிய சதம் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அணி வெற்றி பெறும் போது சதத்தின் சிறப்பு மேலும் அதிகரிக்கிறது.

பவுண்டரிகள் விளாசுவதை தவிர்த்து ஒன்று, இரண்டு ரன்கள் எடுப்பதில் தான் கவனம் செலுத்தினேன். டி வில்லியர்சிடம், நீங்கள் பேட்டிங் செய்யும் போது என் இதயம் படபடவென அடித்துக்கொண்டதாக கூறினேன். அவருக்கு புகழ்வது பிடிக்காது.

கிரிக்கெட்டில் அனைத்து ஷாட்களையும் அவரால் விளையாட முடியும். அவர் அணியை வெற்றிபெறவைக்க போராடிய விதம் அருமையாக இருந்தது. அவருடன் இணைந்து விளையாடும் போது அவரது பேட்டிங்கை ரசிப்பது போல், எதிர் அணியில் இருந்து கொண்டு செய்யமுடியவில்லை.

உலக கோப்பையின் முதல் லீக் போட்டியில் (பிப்.15) பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லி 107 ரன் எடுத்தார். அதன் பின், 14 போட்டிக்கு பிறகு தற்போதுதான் சதம் அடித்துள்ளார்.

பேட்டிங் வரிசையில் 3வது வீரராக களமிறங்கி அதிக சதம் அடித்த வீரர்களில் கோஹ்லி 3வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 3வது வீரராக 16 சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 29, இலங்கையின் சங்கக்கரா 18 சதம் அடித்துள்ளனர்.

Related Posts