டில்லிக்கு பயணமானார் வடக்கு முதல்வர்

இந்தியா புதுடில்லியில் நடைபெறவுள்ள ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’சர்வதேச மாநாட்டின் அரசியல் அமர்வுக்கு தலைமை தாங்குவதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளார்.

cv-vickneswaran-cm

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விசேட உரையாற்றுவதற்காக முதலமைச்சருடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் இந்தியா சென்றுள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கீழ் இயங்கும் உலக இந்து காங்கிரஸ் இன்று வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களும் புதுடில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் சர்வதேச இந்து மாநாட்டுத் தொடர் ஒன்றை நடத்துகின்றது.

குறித்த விடுதியில் ஒரே நேரத்தில் ஏழு மாநாடுகள், 45 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. உலகெங்கும் இருந்தும், இந்தியாவில் இருந்தும் ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான பேராளர்கள் இந்த மாநாடுகளில் பங்குபற்றுகின்றனர்.

சுமார் இருநூறு அதிதிப் பேச்சாளர்கள் இந்த மூன்று நாள்களிலும், ஏக காலத்தில் நடைபெறும் பல்வேறு அமர்வுகளிலும் உரையாற்றுவர்.

உலக இந்து பெண்கள் மாநாடு, உலக இந்து ஊடக மாநாடு, உலக இந்து நிறுவகங்களின் மாநாடு, உலக இந்து அரசியல் மாநாடு, உலக இந்து இளைஞர்கள் மாநாடு, உலக இந்து கல்வி மாநாடு, உலக இந்து பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகிய ஏழுமே ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன.

இதில், இந்து அரசியல் மாநாட்டில் ‘தீவிர, சிக்கலான அரசியல் சூழ் நிலையில் கூட்டு எத்தனங்கள்’ என்ற தலைப்பில் ஓர் அமர்வுக்கே வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை வகிக்கின்றார்.

அதில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கருத்துரை வழங்குகின்றார்.

Related Posts