டில்ருக்சனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையும்! நாளை நல்லடக்கம்!

வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை  அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது.

இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை அவரது சொந்த இடமான பாஷையூரில் நடைபெறவுள்ளது.

அதேவேளை அவரது படுகொலைக்கெதிரான எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக நீண்ட இழுபறிகளின் பின்னரே மரியதாஸ் டில்ருக்சனது பூதவுடல் நேற்று பிற்பகல் அவரது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

டில்ருக்சனது பூதவுடலுடன் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் செல்கின்றனர்.

இந்தக் கட்சியினரின் பாதுகாப்புடன் நேற்றிரவே பூதவுடல் தாங்கிய வாகனம் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் போராளியான அவர் தகவலொன்றின் அடிப்படையினில் 2009ம் ஆண்டின் பிற்பகுதியினில் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்நாள் டில்ருக்சனின் தந்தையும் தாயும் ராகம வைத்தியசாலையில் உள்ள மகனைப் பார்வையிடுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக மகர சிறைச்சாலைக்குச் சென்றபோதே அவர் உயிரிழந்த விடயம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை வவுனியா சிறையில் நடந்த கொடூரமான தாக்குதல் காரணமாக கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேஸ் நிமலரூபன் (வயது 28) என்ற கைதி மரணமும் தற்போது யாழ். பாஷையூரைச் சோ்ந்த மரியதாஸ் டில்ருக்சனும் உயிரிழந்துள்ளமையும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளதாக அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அச்சம் வெளியிட்டுள்ளதுடன் தங்களது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

Related Posts