டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் காலமானார்

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 86. பால முரளியின் இயர் பெயர் முரளி கிருஷ்ணா. எட்டு வயதில் இவர் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனையில் பாடிய விதத்தை கண்டு ‘பால’ என்ற அடைமொழி வழங்கப்பட்டது.

bala-murali-kirushna

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மங்களப்பள்ளி என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்தொண்டு புரிந்தவர். தாய் சூர்ய காந்தம்மாள், தந்தை பட்டாபி ராமய்யா. இருவருமே இசைக் கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்கள். பாலமுரளி கிருஷ்ணா ஐந்து வயதிலேயே இசையில் ஆர்வம்கொண்டிருந்தார்.

இசை குறித்த இவரது ஆய்வுகள் வாழ்நாள் சாதனையாகும். இசை வைத்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர். அது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்தவர். தெலுங்கு, கன்னட, சம்ஸ்கிருத, மலையாள, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மொழிகளில் பெரும் புலமை உடையவர்.

400-க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புக்களை 72 மேளகர்த்தாக்களை கொண்டு உருவாக்கியவர். பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்தவர். சந்த ஒலிகளைக் கோர்வையாக்கித் தாளச் சங்கிலியில் கதி பேதத்தைக் கொண்டு வந்து, புதிய தாள முறைகளை உருவாக்கிய பெருமை உடையவர்.

முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் இவர்.

பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே என்று பல விருதுகை பெற்றவர்.

‘பக்த பிரகலாதன்’ படத்தில் நாரதராக நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் இவர் பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வகையில் ‘திருவிளையாடல்’ படத்தில் ‘ஒரு நாள் போதுமா?’, ‘நூல்வேலி’ படத்தில் ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியும்’, ‘பசங்க’ படத்தில் ‘அன்பாலே அழகாகும் வீடு’ இன்னும் சில பாடல்கள் அடங்கும். சுமார் 400 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

Related Posts