சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் டப்பிங் தொடர்களை கட்டுப்படுத்தக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதனை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகை ராதிகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் நடிகர்-நடிகைகள் குஷ்பு, மனோபாலா, ரமேஷ்பாபு, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் சிவன் சீனிவாசன் கூறுகையில், ‘சமீப காலங்களாகவே டப்பிங் தொடர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ் தொடர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன் சின்னத்திரையை நம்பியிருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் டப்பிங் தொடர்களை கட்டுப்படுத்த சின்னத்திரையின் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம். இதன் அடுத்தக்கட்டமாக சின்னத்திரை கலைஞர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி கோரிக்கை மனுவாக தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்’ என்று கூறினார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட சின்னத்திரை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.