டக்ளஸ் வராததால் ‘நினைவுத்தூபி’ ஒத்திவைப்பு

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி ஒன்றை ஓமந்தையில் அமைத்தல் மற்றும் நினைவு கூறுவதற்கான பொதுத் திகதி ஒன்றை அறிவித்தல் தொடர்பான, எம்.பியான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போதும் சபைக்கு எம்.பி வருகைதராமையினால் அப்பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது.

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நிறைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூர்வதற்கான பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல் – வட மாகாணத்தில் கடந்த பல தசாப்தங்களாகக் காணப்பட்ட யுத்த நிலவரம் நீங்கி அமைதியானதொரு வாழ்க்கை முறைக்கு மக்கள் பிரவேசித்துள்ளதோடு, கடந்த காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும், யுத்த நிலவரம் காரணமாகவும் படுகொலைக்கு உள்ளான அனைத்து இன, மத மற்றும் சமூகங்களைச் சேர்ந்த சகல மொழிகளையும் பேசுகின்ற மக்களை இலங்கையர்களாக நினைவுகூர்ந்து, அம்மக்கள் தாய் நாட்டுக்காக மேற்கொண்ட தியாகங்களுக்கு மதிப்பளிப்பதற்காக, வட மாகாணத்தின் ஓமந்தைப் பிரதேசத்தில் பொருத்தமானதோர் இடத்தில் ‘நினைவுத்தூபியொன்றை’ அமைப்பதற்கும், மேற்படி யுத்த நிலவரம் காரணமாக உயிரிழந்த சகல இன, மன மற்றும் மொழிகளைப் பேசுகின்ற மக்களை நினைவுகூர்வதற்காக பொருத்தமான திகதியொன்றைப் பெயரிட்டு ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென அப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பிரேரணை, நேற்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் 1.35க்கு பிரதி சபாநாயகரினால் விவாத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, டக்ளஸ் எம்.பியின் பெயர், இரு தடவைகள் அழைக்கப்பட்ட போதும் அவர் அவையில் பிரசன்னமாகியிருக்காமையால் பிரேரணை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், டக்ளஸ் எம்.பி, நேற்று (06) காலை வேளையில் அவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts