ஜோதிகாவுக்கு புல்லட் பைக் ஓட்டக் கற்று கொடுத்த சூர்யா

பெண்கள் கார் ஓட்டுவதென்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விமானத்தையே பெண்கள் ஓட்டும் போது காரை ஓட்டுவது பெரிய விஷயமா என்ன?. ஆனாலும், பெண்கள் பைக் ஓட்டுவது என்பது ரொம்பவே ஆச்சரியமான விஷயம்தான். ஸ்கூட்டி, ஸ்கூட்டர் ஆகியவற்றை பெண்கள் அதிகம் ஓட்டுவார்கள். ஆனால், ‘கியர்’ வைத்த பைக்கை ஓட்டுபவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. எப்போதோ ஒரு முறைதான் அப்படி பைக்கை ஓட்டும் பெண்களை சாலைகளில் பார்க்க முடியும். இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் ‘கியர்’ வைத்த பைக் ஓட்டுவதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் அப்படி பைக்கை ஓட்டுபவர்களை சாலைகளில் அதிகம் பார்க்கும் வாய்ப்புகள் வரலாம்.

jothika-soorya

சினிமாவில் பெண்கள் அதிகபட்சம் காரை ஓட்டுபவர்களாகவும், ஸ்கூட்டி ஓட்டுபவர்களாகவும்தான் காட்டப்படுவதுண்டு. ஏதோ ஒரு சில படங்களில் மட்டுமே எப்போதாவது பைக்கை ஓட்டுவது போல் சில நிமிடங்கள் மட்டுமே காட்டுவார்கள்.

நடிகை ஜோதிகா தற்போது பைக் ஓட்ட கற்று வருகிறார், அதுவும் சாதாரண பைக் அல்ல புல்லட் பைக். சென்னை, பெசன்ட் நகர் சாலைகளில் ஜோதிகாவுக்கு புல்லட் பைக் ஓட்ட அவருடைய கணவரும், நடிகருமான சூர்யா கற்றுத் தருகிறார். இதைப் பார்த்த சிலர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். ஜோதிகா அடுத்து ‘குற்றம் கடிதல்’ பட இயக்குனர் பிரம்மா.ஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்காக அவர் புல்லட் ஓட்ட கற்று வருகிறாராம்.

Related Posts