Ad Widget

ஜேர்மனி, சுவிஸ், துருக்கி தாக்குதல்களால் அதிர்ச்சியில் ஐரோப்பா!

ஜேர்மனியின் பேர்லின் நகரில் பார ஊர்தி ஒன்றை சந்தைக்குள் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும், துருக்கியில் ரஷ்யத் தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பன ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெர்லின் நகரின் இதயப் பகுதியில் உள்ள, பிரதான வணிகத் தெருவான, Kurfuerstendamm, இற்கு அருகேயுள்ள, Breitscheidplatz சந்தையில் நேற்றிரவு நத்தார் சந்தை களைகட்டியிருந்த போது, பாரஊர்தி ஒன்று வேகமாக அதனுள் செலுத்தப்பட்டது.

இந்தப் பாரஊர்தி, சந்தைக்குள் நுழைந்து, பொதுமக்களையும், வர்த்தக நிலையங்களையும் கண்டபடி மோதியபடி, சுமார் 80 மீற்றர் தூரம் வரை சென்றது.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8.14 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் வரை காயமடைந்தனர்.

உடனடியாக அந்த இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், பாரஊர்தியை செலுத்தியவர் என்று நம்பப்படும் நபரை கைது செய்தனர்.

இவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து அகதியாக புகலிடம் தேடியவர் என்று தெரியவந்துள்ளது. எனினும் இவர் பாகிஸ்தானியரா அல்லது வேறு நாட்டவரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் போலந்தில் பதிவு செய்யப்பட்டதாகும். அங்கிருந்து இது திருடிவந்ததாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது திட்டமிட்ட ஒரு தாக்குதல் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஜேர்மனியிலும், ஐரோப்பாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிரான்சின் நீஸ் நகரில், கடந்த ஜூலை 14ஆம் நாள் இதுபோன்று பார ஊர்தி ஒன்றை மக்கள் கூட்டத்துக்குள் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் 86 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் அன்ரே காலோவ் துருக்கிய தலைவகர் அங்காராவில் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அங்காராவில், ஒளிப்படக் கண்காட்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது, துருக்கிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், பின்புறமாக இருந்து அவரைச் சுட்டுக் கொன்றார்.

ரஸ்யத் தூதுவர் அன்ரே காலோவ் மேடையில் சரிந்து விழுந்து மரணமானார். அங்கு துப்பாக்கியுடன் தோன்றிய கொலையாளி, அலெப்போவில் ரஷ்யாவின் தலையீடுகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

இந்தச் சம்பவம் ஐரோப்பாவில் மாத்திரமன்றி, அனைத்துலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், சுவிற்சர்லாந்தின், சூரிச் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சிலர் காயமடைந்தனர்.

ஜேர்மனி, துருக்கி, சுவிற்சர்லாந்தில் ஒரே நாளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts