குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றா மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று யாழ்.நீதிமன்ற நீதவான் சிவகுமார் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த நீதவான் தந்தை மற்றும் தாயாரிடமும் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதனையடுத்து வழக்கு மே மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகளின் சாவுக்கு பாதிரிமாரே காரணம் – தந்தையார்
என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம் என குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றாவின் தந்தையார் மன்றில் சாட்சியம் அளித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
எனக்கு ஐந்து பிள்ளைகள் அவர்களில் ஜெரோமி கொன்சலிற்றா எனது இரண்டாவது மகள். இவரும் அடப்பன் வீதியில் எங்களுடனேயே வாழ்ந்து வந்தவர்.
கடந்த 13ஆம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்து பூங்காவிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. நாம் இரவு 12மணி வரையும் தேடினோம். மகள் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மறுநாள் வீதியில் சென்றவர்கள் பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் பெண் ஒருவரது சடலம் இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாகச் சென்று பார்த்த போது குறித்த சடலம் எனது மகள் என்று அடையாளம் கண்டுகொண்டேன்.
எங்கள் வீட்டில் இருந்து குறித்த கிணறு 100 மீற்றர் தூரம். அத்துடன் பாதுகாப்பாக மூடி மதில் கட்டப்பட்டுள்ள கிணறாகவும் இருக்கின்றது.
எனது மகளுக்கு 2பாதிரிமார்களால் பாலியல் வற்புறுத்தல் இருந்தமையினால் அவர் மனஉளைச்சலிலேயே இருந்தார்.”என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம்”. “எனது மகள் இறந்ததிற்கு பெரியகோயிலில் இருக்கும் 2 பாதர்மார் தான் காரணம் என சந்தேகம்” என்றார்.
தாயார் சாட்சியமளிக்கையில், பயமாய் இருக்குது பாதர் எனக்கு குளிசை வாங்கி தாங்கோ என என் மகள் கடந்த மார்ச் மாதம் தொலைபேசியில் கதைத்துக்கொண்டதை நான் என் காதால் கேட்டேன். அப்போது நான் தொலைபேசியை பறித்துவிட்டு என்ன நடந்தது என்று கேட்டேன். பெரியகோயிலில் இருக்கின்ற 2பாதர்மார் என்னை வற்புறுத்துகின்றனர். அவர்கள் இருவரும் என்னிடம் ஐ லவ் யூ சொன்னார்கள். எனக்கு இருவரும் முத்தம் தந்தனர் . இவற்றை வெளியில் சொல்லக் கூடாது. சொன்னால் பின்னர் தெரியும் என்று இருவரில் ஒருபாதர் பயமுறுத்தி உள்ளார். என எனது மகள் என்னிடம் தெரிவித்திருந்தார்.
அப்போது எனக்கு இலக்கம் பார்க்க தெரியாது. பாதருடனேயே பேசியதாக மகள் கூறினார். அப்போது அவரிடம் இருந்து குறித்த 2 பாதிரிமார்களுடைய இலக்கத்தையும் பெற்றிருந்தேன். மனம் சோர்வான நிலையில் சாப்பிடுவது குறைவாகவே மகள் இருந்து வந்தார். எனினும் நாங்களோ மகளோ தற்போது பெரியகோயிலுக்கு போவது இல்லை. பக்கத்தில் உள்ள கோயிலுக்கே போய் வருகின்றோம். சம்பவநாள் நாங்கள் வீட்டில் இல்லை. பூங்காவிற்கு போவதாக தம்பியாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. எல்லா இடமும் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அன்று இரவு குறித்த பாதிரிமார்களுக்கு தொலைபேசி எடுத்தேன். அதில் ஒருவர் இலக்கம் தவறானது என்று கூறி தொடர்பை துண்டித்தார்.
மற்றையவர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருப்பதாகவும் பின்னர் எடுப்பதாகவும் கூறி தொடர்பை துண்டித்து கொண்டார். மறுநாள் காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தோம். அன்று மதியம் அயலில் உள்ளவர்கள் கிணற்றுக்குள் சடலம் இருப்பதைக் கூறினர். உடனேயே சென்று பார்த்தோம் அது மகளின் சடலம் என அடையாளம் கண்டு கொண்டோம். போன் கதைத்ததில் இருந்து பார்த்தால் குறித்த 2 பாதர் மீதும் தான் எமக்கு சந்தேகம். அவர்கள் இதுவரை எம்முடன் எவ்விதமான தொடர்பையும் ஏற்படுத்தவில்லை.எனினும் இது குறித்து ஆயர் இல்லத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் சாட்சியமளித்தார். –
மன்றுக்கு வருகின்றது குருநகர் யுவதியின் வழக்கு
யுவதியின் சாவுக்கு நீதி வேண்டி ஆயர் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்