தமிழக முதல்வராக இன்று திங்கட்கிழமை மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றார்.அவருக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுகவின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்ற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.
சரியாக மதியம் 12 மணிக்கு நடந்த இந்த பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதாவுக்குப் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இரு பிரமாணங்களையும் ” ஆண்டவன் மீது ஆணையிட்டு” என்று கூறி பிரமாணம் எடுத்துகொண்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அவருடைய அமைச்சரவையில் நியமிக்கப்பட்டிருக்கும் 28 அமைச்சர்களும் கூட்டாக ” ஆண்டவன் மீது ஆணையிட்டு” பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.
இரு குழுக்களாக அவர்கள் இந்தப் பிரமாணங்களை எடுத்துக்கொண்டனர். முதலில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 15 அமைச்சர்களும், பின்னர் மற்ற 13 அமைச்சர்களும் கூட்டாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாஜக உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.