ஜெயலலிதா மரணம் : மருத்துவர் குழுவின் 10 முக்கிய தகவல்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர் குழு வெளியிட்ட 10 முக்கிய தகவல்கள்

  1. ஜெயலலிதா, `செப்சிஸ்’ என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது மிக விரைவாகத் தாக்கும் ஆற்றல் கொண்டது. அதனால், இதயம் பாதிக்கப்பட்டு, சிறுநீர் தொற்றும் ஏற்பட்டு. உடல் உறுப்புக்கள் செயலிழக்கத் தொடங்கின.
  2. மாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. எக்மோ கருவி பொருத்தப்பட்டு, 24 மணி நேரத்துக்குப் பிறகும் அவரது இதயம் துடிக்கவில்லை. அதன் பிறகு, குடும்பத்தார், அமைச்சர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  3. மாரடைப்பு ஏற்படும் வரை ஜெயலலிதா பேசினார். மூச்சுவிட முடியவில்லை என்று கூறினார். அதற்கு முந்தைய நாட்களில், சசிகலாவோடு ஜெயலலிதா பேசுவார். மேலும், அவர் அனுமதித்தவர்களும் அவருடன் பேச அனுமதிக்கப்பட்டார்கள்.
  4. ஜெயலலிதா உடல்நிலை குறித்து, மருத்துவமனைத் தலைவரின் அலுவலகத்தில் தினசரி விளக்கங்கள் தரப்பட்டன. அதில், சசிகலா, தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் அமைச்சர்கள் இருந்தார்கள்.
  5. இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஜெயலலிதா கையெழுத்துப் பெற வேண்டிய நேரத்தில், கையில் வீக்கம் இருந்ததால் கைரேகை பெறப்பட்டது. அப்போது அவர் சுயநினைவோடுதான் இருந்தார்.
  6. ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்தார், தயிர் சாதம் சாப்பிட்டார் என்பது உண்மைதான்.
  7. ஜெயலலிதா அறையில் சி.சி. டிவி காமராக்கள் இல்லை. இருந்தாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியின் புகைப்படங்களை வெளியிடுவது நடைமுறை அல்ல.
  8. ஜெயலலிதாவை லண்டனுக்கு எடுத்துச் செல்வதில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து, வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
  9. ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை. எம்.ஜி.ஆர். உடலைப் போலவே, ஜெயலலிதா உடலும் பதப்படுத்தப்பட்டது. நள்ளிரவு 12.20 மணிக்குத் தொடங்கி, 15 நிமிடம் நடைபெற்றது.
  10. ஜெயலலிதா சிகிச்சைக்கான மருத்துவச் செலவு 5.5 கோடி ரூபாய். இதற்கான பில் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.

Related Posts