ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: ஓ.பி.எஸ்

பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும் ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை என்றும் கூறினார்.

இதுதவிர தற்போதைய தலைமை மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் தன் மனதில் உள்ள விஷயங்களில் நூற்றில் 10 சதவீதம் தான் வெளியே சொல்லி இருப்பதாக கூறினார். இந்த பேட்டியை அடுத்து அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். என்னை இரண்டு முறை முதலமைச்சர் ஆக்கினார். அவரது வழியில் தான் நானும் ஆட்சி நடத்தினேன். எப்போதும் அவர் வழியிலேயே செயல்படுகிறேன்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எனவே, விசாரணைக் கமிஷன் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.

வி.கே. சசிகலா கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக உள்ளார். விரைவில் நிரந்தரப் பொதுச்செயலாளராக வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்படவேண்டும்.

எனக்குப் பின்னால் பா.ஜ.க. உள்ளது என கூறுவது வடிகட்டிய பொய். பா.ஜ.க. என்னை இயக்குவதாகக் கூறுவதும் பொய்.

எங்களுடன் இணைந்து செயல்பட வருமாறு தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன். விரைவில் தமிழக மக்களை நேரில் சந்தித்து எனது தரப்பு கருத்துக்களை தெரிவிப்பேன்.

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். சட்டமன்றத்தை கூட்டுவது சட்டமன்றத் தலைவரின் அதிகாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts