ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் : உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்டம்பர் 22ம் திகதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5ம் திகதி இரவு, 11:30க்கு மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி வைத்தியநாதன் தன் சொந்த கருத்தாக கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார், உணவு சாப்பிடுகிறார், நடைபயிற்சி மேற்கொள்கிறார்´ என, செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.

Related Posts