ஜெயலலிதா நலம்பெற பால்குடம் எடுத்த பெண் மயங்கி விழுந்து பலி

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சேலத்தில் பால்குடம் எடுத்த பெண் கூட்டநெரிசலில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கோவில் கோவிலாக பல்லாயிரக்கணக்கில் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.

25000 பேர் வரை கூட்டமாக பால்குடம் எடுப்பதால் நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுகின்றனர். இன்று சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்தனர். அப்போது நெரிசல் ஏற்படவே அதிமுகவினர் சிலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் உத்தமசோழபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் பச்சையம்மன் கோவிலில் 10,000 பேர் பால்குடம் எடுத்தனர். இவர்களில் 6 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதில் மயக்கமடைந்த 60வயது மதிக்கத்தக்க கமலாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த வாரம் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், சாமி வந்து ஆடிய பொன்னுத்தாய், குலவை போட்டபடியே திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts