ஜெயலலிதாவை உடல்நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று நேரில் வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

rahul

தில்லியில் இருந்து தனி விமானத்தின் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தி, காலை 11.45 மணியளவில் க்ரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகைதந்தார்.

அவரது வருகையை ஒட்டி மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

மருத்துவமனைக்குள் சென்ற ராகுல் காந்தி சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய ஆதரவையும் காங்கிரஸ் கட்சித் தலைவரின் ஆதரவையும் முதல்வருக்குத் தெரிவிக்கவே வந்ததாகக் கூறினார்.

முதல்வரின் உடல்நலம் தேறிவருவதாகவும் விரைவில் அவர் குணமடைவார் என்றும் ராகுல்காந்தி கூறினார்.
ஜெயலலிதா குணமடைவதற்காக தன் முழு சக்தியையும் அளிக்க விரும்புவதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவை அவர் நேரில் சந்தித்தாரா என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் உடன் சென்றார். ராகுல் காந்தி ஜெயலலிதாவை நேரில் சந்தித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ராகுல் காந்தி பேசியதற்கு மேல் தன்னால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.

Related Posts