ஜெயலலிதாவுக்கு சிறையா?, பிணையா ?

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

jeyaa

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு நீதிபதி ரத்னகலா, இந்த மனுக்களை வழக்கமான நீதிமன்ற அமர்வில்தான் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கூறி, வழக்கு விசாரணையை ஒக்டோபர் 7ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மனுக்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு வருகின்றன.

அரசுத் தரப்பில் ஜி.பவானிசிங், ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி, வழக்குரைஞர்கள் பி.குமார், எம்.ஏ.வேணுகோபால், எஸ்.செந்தில், கே.சி.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜராகி வாதிடவுள்ளனர்.

சசிகலா தரப்பில் எச்.கே.வித்யாசாகர், சி.மணிசங்கர், சுதாகரன் தரப்பில் மூர்த்தி ராவ், கே.சீனிவாசன், இளவரசி தரப்பில் ஹஷ்மத்பாஷா, ஏ.அசோகன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் ஆஜராக உள்ளனர்.

இதனிடையே, ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகம் முன் அதிமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் சிறை முன் திரண்ட அதிமுக தொண்டர்கள் 108 தேங்காய்களை உடைத்து போராட்டம் நடத்தினர்.

Related Posts