ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அது குறித்து நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து இலங்கையின் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், இது இந்தியாவின் உள்நாட்டு விவகராம் ஆகும். அதனால் அதில் நாங்கள் தலையிட்டு விமர்சிக்கக் கூடாது என்று உள்ளோம்.
இந்தியாவுடனான இலங்கையின் தொடர்பு என்றால் அது மத்திய அரசுடன் மட்டுமே, மாநில அரசுகளுடன் இல்லை. இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மனித உரிமை மீறலை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
மேலும் மீனவர் பிரச்சனையை தீர்க்க கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்தார் அவர். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவதும், கைது செய்வதுமாக உள்ளது குறித்து இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்குமாறு வலியுறுத்தி அவர் மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.