தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளமையால் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி தமிழக முன்னாள் முதல்வர் செயற்பட்டமையும் இலங்கையில் வடக்குடன் கைகோர்த்து இலங்கைக்குள் பிரிவினை வாதத்தினை தூண்டியமைக்கும் இந்திய நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அதற்கும் அப்பால் இனவாத தமிழ் பிரிவினைவாத செயற்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிட வேண்டும். எனவே, தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்த வரையில் நன்மையாகவே அமையும்.
அதேபோல் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தனது செயற்பாடுகளையும் இந்தியாவுடன் கைகோர்த்து வடக்கில் தனி கட்சியமைக்கும் செயற்பாடுகளையும் இனிமேல் மேற்கொள்ள முடியாது. இதுவும் அரசாங்கத்திற்கு சாதகமான விடயமாகவே அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் மற்றும் இலங்கையின் தேசியத்தினை அழிக்கும் செயற்பாடுகளை மேற்கத்தேய மற்றும் புலம்பெயர் சக்திகள் மேற்கொள்ளப்படுகின்றமைக்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறு தடைகளை விதிக்கின்றதோ அதேபோல் பௌத்த சிங்கள கொள்கைகளையும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ உரிமைகளையும் அழிப்பதற்கு மத்திய கிழக்கின் முஸ்லிம் தீவிரவாத சக்திகள் முயற்சிக்கின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கும் இலங்கை மக்களும் அரசாங்கமும் இடம்கொடுக்கக் கூடாது. எனவே, இலங்கையினை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் நாட்டில் ஆட்சியினையும் அரசியல் தன்மைகளையும் தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே தவிர மதவாத அமைப்புகள் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.