ஜெயலலிதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாது; சீ.வி. விக்னேஸ்வரன்

தமிழ் நாட்டில் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு பெரும் இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

வால்வெள்ளி ஒன்று அரசியல் வாழ்வில் வானில் பளிச்சென்று பிரகாசமாக தோன்றி, திடீரென மறைந்துவிட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலமையில் நடைபெற்றது. இதன்போது, தமிழக முதலமைச்சரின் மறைவையொட்டி 2 நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் நிகழ்த்தப்பட்ட அஞ்சலி உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தமது சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தமிழர்கள் தம்மைத்தாமே ஆழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதி செல்வி ஜெயலலிதா முனைப்புடன் செயற்பட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிக மெல்லிய சுபாவம் கொண்ட, கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட செழிப்பான, மென்மையான சூழலில் வளர்ந்த ஜெயலலிதா, பலவிதமான முரட்டுச் சூழலை எதிர்நோக்கி வந்ததால், சாது மிரண்டது போன்று மிகவும் திடமான இரும்புப் பெண்மணியாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எம்.ஜீ.ஆர் அரசியல் வாழ்வில் இருந்த போது அவருக்கு பெருமை சேர்த்தாலும், அவருக்கு பாரிய இடர்கள், இன்னல்கள் அரசியலில் ஏற்படவில்லை என்றும் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலில், தடுக்கி நின்று வெற்றி பெற்றார் என்பதையும் அவரின் திடசங்கற்பம், வளர்ச்சி, உழைப்பு, விடாமுயற்சி, கெட்டித்தனம் ஆகியன வெளிப்படுத்தி நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஜெயலலிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாது என்றும் வட மாகாண முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

Related Posts