மும்பையில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் போட்டியில் ஜென்னிங்ஸ், குக், அஸ்வின் சாதனை படைத்துள்ளனர்.
* இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் இந்தியாவுக்கு எதிராக நேற்று 2 ஆயிரம் ரன்களை (24 டெஸ்டில் 2,027 ரன்) தாண்டினார். இந்தியாவுக்கு எதிராக இந்த இலக்கை கடந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (2,555 ரன்), வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாயிட் (2,344 ரன்), பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் (2,228 ரன்), வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் (2,171 ரன்), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் (2,049 ரன்) ஆகியோரின் வரிசையில் குக்கும் இணைந்துள்ளார்.
* மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 1975-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இங்கு நடக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் இந்திய அணியில் குறைந்தது ஒரு உள்ளூர் வீரராவது (மும்பை வீரர்) இருப்பார். இந்த முறைதான் ஆடும் லெவனில் ஒரு மும்பை வீரர் கூட இடம் பெறவில்லை. காயத்தால் ரஹானே விலகியதால் இந்த முறை மும்பை வீரர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
* இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த 24 வயதான கீடான் ஜென்னிங்ஸ் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவரது தந்தை ராய் ஜென்னிங்ஸ் தென்ஆப்பிரிக்காவில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடியவர்.
இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி அதன் மூலம் தேசிய அணியில் இடம் பிடித்த கீடான் ஜென்னிங்ஸ் அறிமுக போட்டியிலேயே சதத்தை பதிவு செய்த 8-வது இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை பெற்றார். மொத்தத்தில் இங்கிலாந்து அறிமுக வீரர் சதம் அடிப்பது இது 19-வது நிகழ்வாகும்.
* இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த அறிமுக தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனைக்கும் ஜென்னிங்ஸ் (112 ரன்) சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு 1974-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் 107 ரன்கள் எடுத்ததே இந்தியாவுக்கு எதிராக அறிமுக தொடக்க வீரரின் அதிகபட்சமாக இருந்தது.
* இந்த டெஸ்டில் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 239 ஆக (43 டெஸ்ட்) உயர்த்தியுள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த ஸ்ரீநாத்தை பின்னுக்கு (67 டெஸ்டில் 236 விக்கெட்) தள்ளியுள்ளார்.