ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும் ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர் கிளாவேடாவேசியரால் கொண்டுவரப்பட்டது

யாழ்.மாநகர சபையின் எதிர்தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 12 இற்கு 8 என்ற வீதத்தில் வாக்கொடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்பிரேரணையில்,

“அமெரிக்க அழுத்தங்கள் இன்றி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை வரவேற்போம்!

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாம் கொண்டிருக்கும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையினையும் உள்ளக்கியதே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளாகும்.

ஆகவே, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாம் வெளிப்படையாகவே கூறிவந்திருக்கின்றோம். அமெரிக்கத்தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பாகவே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தோம்.

அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிருந்தாலும் எமது மக்களுக்கான அரசியல் தீர்வை அடைவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றம் இருந்திருக்காது.

இனமுரண்பாட்டுச்சூழலை வளர்த்துக்கொண்டு எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது.

இதுவே காலம் எமக்கு கற்றுத்தந்த அனுபவங்கள். நடைமுறை யாதார்த்தங்களும் இதுவே. இந்த யதார்த்தங்களை உணர மறுத்த காரணத்தினாலுமே கடந்த காலங்களில் அரசியல் தீர்வுக்காக எடுத்து வந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருந்தன.

ஆகவேதான் அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு இன சமூக ஐக்கிய சூழலை பாதுகாத்துக்கோண்டே தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டியுள்ளது.

ஆனாலும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் இனங்களை கூறு போடுகின்றது. இன ஐக்கிய சூழலை திட்டமிட்டு சிதைக்கிறது. இனங்களுக்கிடையிலான பகமையுணர்வை வளர்க்கின்றது.

ஆளும் கட்சி அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண முற்படும்போது எதிர்க்கட்சிகள் அதற்கெதிராக கிளர்ந்தெழும் கடந்தகால அரசியல் குழப்பங்களையே அமெரிக்கத் தீர்மானத்தின் அழுத்தங்கள் இங்கு திட்டமிட்டு உருவாக்குகின்றன.

ஆகவே, சர்வதேச சமூகத்தின் அனுசரணைகளை மட்டும் வரவேற்கும் நாம் எமது மக்களின் நலன் கருதி அமெரிக்க தீர்மானத்தின் அழுத்தங்களை நிராகரிப்போம். இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாம் கோருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை, மாநகர சபை உறுப்பினர் சு.நிசாந்தன் பதவி நீக்கப்பட்டதை அடுத்து அவரது இடத்திற்கு யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலரால் நியமிக்கப்பட்ட செல்வராசா இரமணன் புதிய மாநகர சபை உறுப்பினராக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Related Posts