ஜெனீவா செல்ல அனந்திக்கு அனுமதி

ananthy-sasikaran-tnaஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வட மாகாண சபை சார்பாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு மாகாண சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்குச் செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனந்தி மாகாண சபையில் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், “இந்த விடயம் தொடர்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராகவுள்ள சகோதரி அனந்தி தகுதியானவர் என நினைக்கின்றேன்” என்றார். இதனை ஏற்றுக்கொண்ட சபை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு அனந்தி சசிதரனுக்கு அனுமதியளிப்பதாக சபை தவிசாளர் சி.வீ.கே. சிவஞானம் அறிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அனந்தி, “அனந்தி மட்டுமல்ல இன்னும் பல உறுப்பினர்கள் அங்கு செல்ல வேண்டும்” என்றார்.

அதற்குப் பதிலளித்த சபைத் தவிசாளர், “அது மாகாண சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டது. இதனால் அவர்கள் தீர்மானம் எடுத்து ஜெனீவா செல்லலாம்” என்றார்.

அத்துடன், அங்கு கூட்டத் தொடரில் கலந்துகொள்ள முடிந்தால் கலந்துகொள்ளலாம் இல்லையேல் வெளியில் நின்று ஆதரவளிக்கலாம் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.

Related Posts