ஜெனீவாக் கூட்டத்தொடரை இலக்குவைத்தே மாவீரர் தினம் அனுட்டிக்க அரசு அனுமதி

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை இலக்குவைத்தே தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் மாவீரர் தினத்தை அனுட்டிக்க சிறீலங்கா அரசாங்கம் அனுமதியளித்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்விலிருந்து தமிழ் மக்களை திசைதிருப்பும் நோக்கிலும் சிறீலங்கா அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுட்டிக்க அனுமதி வழங்கியிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தலாம், ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடாது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்து வந்தது.

இந்நிலையிலேயே, தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர் துயிலுமில்லங்கள் 26, 27ஆம் திகதிகளில் துப்புரவு செய்யப்பட்டு 27ஆம் திகதி மாலை 6.05மணியளவில் துயிலுமில்லப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு 2009ஆம் ஆண்டு முன்னர் நடைபெற்றதுபோல் இடம்பெற்றமை மேலும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts