ஜெனிவா செல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை – சிவாஜிலிங்கம்

ஜெனிவாவுக்கு செல்வதற்காக அனுமதியை கோரி வடமாகாண ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்து இரண்டு வார காலமாகின்ற போதிலும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வடமாகாண சபை தலைவரிடம் உரிய அனுமதி பெற்று முறையாக அனுப்பப்பட்ட விடுமுறைக்கான அனுமதியை இரண்டு வார காலமாகியும் வழங்காமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எவையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.நா. கூட்டத்தொடரில் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ளவுள்ளேன். இதற்கான விடுமுறை கடிதத்தை வடமாகாண சபைக்கு வழங்கிவிட்டேன். இதில் கலந்துகொள்வது தொடர்பாக சில விடயங்களை வடமாகாண முதலமைச்சருடன் நானும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் கலந்துரையாடியிருந்தோம்.

வடமாகாண சபை சார்ந்த உறுப்பினர் குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கு கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறும் பங்கு கொள்ளும் உறுப்பினர் ஆகிய எமக்கு போக்குவரத்து நிதி ஒதுக்கீடு சபை மூலம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டேன்.

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை மற்றும் உள்ளக விசாரணை வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும் என்ற இரண்டு பிரேரணைகளையும் எழுத்து மூலம் உறுதிப்படுத்தி தருமாறு முதலமைச்சரிடம் கேட்டிருந்தேன்.

சபை சார்பில் கூட்டத்தொடரில் கலந்துகொள்வது தொடர்பான முடிவுகளை தனித்து எடுக்க முடியாது எனவும் சபையில் கலந்துரையாடியே முடிவெடுக்க வேண்டும் என எமக்குக் கூறிய முதலமைச்சர், போக்குவரத்து நிதி ஒதுக்கீடு சபையின் அமைச்சரவையூடாக முடிவுகள் எட்டப்படவேண்டும் என்றும் கூறினார்.

இரு பிரேரணைகள் தொடர்பான விடயத்தை தான் எழுத்து மூலத்தில் உறுதிப்படுத்தி தருவதாகவும் அதற்கான வேண்டுகோள் கடிதத்தை தருமாறும் முதலமைச்சர் கூறியதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Related Posts