சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கே இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவானது மேற்குலக நாடுகளினால் வழங்கப்படுகின்ற நிதிகளின் மூலமாகவே இயங்குகின்றது.
அதேபோல் மனித உரிமைகள் ஆணையகத்தில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய பெரும்பாலானவர்கள் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அதில் பணி புரியும் ஊழியர்களில் பாதிப்பேர் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்களே.
அதேபோல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்ததும் மேற்குலக நாடுகளே.
இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகி இருப்பதனால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை காரம் குறைவானதாக அமைந்துள்ளது என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது, “இது மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை அல்ல அரசியல் ரீதியான பிரச்சினையே” என்று பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி அக்ரம் தெரிவித்திருந்த கருத்து இந்த பிரச்சாரங்களினுடாக உறுதிப்படுத்தப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த அறிக்கை காரம் குறைந்ததாக எனக்குத் தெரியவில்லை.
பேர்க்குற்ற நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக பரிந்துரை செய்வது தான் இவ்வாறான அறிக்கை மூலம் உச்சகட்டமாக செய்ய முடியும்.
இந்த அறிக்கையில் அது பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர்களால் முடியுமான அளவு தூரம் வரை சென்றுள்ளனர் என்பது தௌிவாகின்றது.
ஆகவே அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.