ஜெனிவாவை மிக இலகுவாக எதிர்கொள்வோம்! அரசு நம்பிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை மிக இலகுவாக எதிர்கொள்வோம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

“சர்வதேச நாடுகள் இலங்கை அரசு மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளன. அதனால், இம்முறையும் போதுமான கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்கும்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார்.

‘ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதனை எதிர்கொள்ள அரசு எவ்வாறான முன்னாயத்தங்களைச் செய்துள்ளது’ என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மேலும் பதிலளிக்கையில்,

“நாம் மிகவும் இலகுவாக எதிர்கொள்வோம். அனைத்த நாடுகளும் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனநாயகத்தின் சாம்பியன், கேப்டன் என்று கொலம்பியா நாட்டு ஜனாதிபதி புகழ்ந்துள்ளார்.

அதுமட்டுமன்றி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பில் ஏனைய உலக நாடுகள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சர்வதேச நாடுகள் ஆரம்பத்தில் பார்த்ததைப் போன்று இப்போது எம்மைப் பார்க்கவில்லை. புதிய கண்கொண்டு பார்க்கின்றன. எமது செயற்பாடுகளுக்கு சர்வதேசத்தின் மத்தியில் வரவேற்பு உள்ளது. நல்ல புரிந்துணர்வும் உள்ளது. இம்முறையும் (ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்) எமக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கும் . எந்தப் பிரச்சினையும் இல்லை” – என்று குறிப்பிட்டார்.

Related Posts