ஜூலைக்கு தள்ளி போகும் ‘கபாலி’?

மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், ரித்விகா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது.

பின்னர் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பினர். அதோடு, கபாலி படத்தின் இறுதிகட்டத்தில் இருந்தபோதே ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிலும கலந்து கொண்டார் ரஜினி. அதனால் திட்டமிட்டதில் இருந்து கொஞ்சம் தாமதமாக கபாலி படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த நிலையில், தற்போது கபாலி படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. மேலும், விஜய் நடித்துள்ள தெறி படம் ஏப்ரல் 14-ந்தேதி வெளியாவதால் மே மாதம் தேர்தல் அறிவிப்புகள் வெளியான பிறகு கபாலி படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது அதுபற்றி விசாரித்தால் இறுதிகட்ட பணிகள் முடிவடையவே மே மாதம் முழுக்க ஆகிவிடும் என்கிறார்கள். அதனால் ஜூன் மாதம் தான் கபாலி ரிலீசுக்கு தயாராகும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்து விடும் என்பதால், ஜூலையில் கபாலி படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்.

Related Posts