ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்!

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே… என அந்த சின்னப் பையன் பாடியபோது, பிற்காலத்தில் நாம் அவன் படத்துக்கே இசையமைக்கப் போகிறோம் என்று கொஞ்சமும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.

இன்று அது நடந்துவிட்டது. அன்று சின்னப் பையனாக அந்தப் பாடலைப் பாடியவர் ஜிவி பிரகாஷ். ரஹ்மானின் சொந்த அக்கா பையன். இன்று இசையமைப்பாளராக மட்டுமல்ல, நடிகராகவும் முன்னணிக்கு வந்துவிட்டார்.

கைவசம் ஏழு படங்களை வைத்திருக்கும் ஜிவி பிரகாஷ், அடுத்து ராஜீவ் மேனனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்துக்குதான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மின்சாரக் கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களைத் தந்தவர் ராஜீவ் மேனன். திரைப்படக் கல்லூரி, விளம்பரப் படங்கள் என பிஸியாக இருந்தவர், மீண்டும் படம் இயக்க வருகிறார்.

ஏற்கெனவே இந்தப் படத்துக்காக இரு பாடல்களை உருவாக்கித் தந்துவிட்டாராம் ஏ ஆர் ரஹ்மான்.

இந்தப் படத்தில் முன்னணி நடிகை ஒருவர்தான் நாயகியாக நடிக்கப் போகிறார். நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல். விரைவில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகவிருக்கிறது.

Related Posts