ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் நடைபெற்ற முதல் இருபது 20 போட்டியில் இந்தியா 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதுகுறித்து இந்தியஅணித்தலைவர் டோனி கூறுகையில் ‘‘நாங்கள் எங்களின் ஆக்கப்பூர்வமான முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. இறுதியாக எனக்கு வீசப்பட்ட பந்து மிக அருமையான பந்து.
உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக விளையாடலாம். ஆனால் இந்தியா ‘ஏ’அணியில் இருந்து இந்திய அணிக்கு வரும் போது அதிக நெருக்கடி இருக்கும். அவர்களுக்கு இந்த தோல்வி ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
தோல்விக்கான காரணம்க குறித்து தீவரமாக யோசிக்க வேண்டாம், துடுப்பாட்டகாரர்களின் நிறைய தவறுகளே தோல்விக்கு முக்கிய காரணம். சரியான முறையில் வீரர்கள் துடுப்பெடுத்தாடவில்லை.
நாங்கள் சிறந்த11 வீரர்கள் கொண்டு விளையாடவில்லை. எனினும் ஜிம்பாப்வே வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள் என்றார்.
ஜிம்பாப்வே திரில் வெற்றி
இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் இருபது போட்டியில் ஜிம்பாப்வே 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ’திரில்’ வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக வென்றது.
தற்போது 2 இருபது போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று ஹராரேயில் நடந்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி பந்துவீச முடிவு செய்தார். அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஜிம்பாப்வே அணிக்கு மசகட்சா 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிபாபா 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரிச்மண்ட் (0) ’ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.
இதனையடுத்து வந்த வாலர் 30 ஓட்டங்களிலும், சிக்கந்தர் 20 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
இதன் பின்னர் தனியாளாக அதிரடி காட்ட ஆரம்பித்தார் சிகும்புரா. சிக்சராக பறக்கவிட்ட அவர் அரைசதம் கடந்தார்.
இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது. சிகும்புரா (54), மட்ஜிவா (5) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில், பும்ரா 2 விக்கெட் எடுத்தார்.
இதன் பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ராகுல் முதல் பந்திலே ஓட்டம் எதனையும் பெறாது ஏமாற்றமளித்தார்.
ராயுடு 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய மந்தீப் சிங் 31 ஓட்டங்களும், அதிரடியாக ஆடிய மணீஷ் பாண்டே 48 ஓட்டங்களும் எடுத்து நடையை கட்டினர்.
பதற்றமான சூழ்நிலையில் டோனி, அக்சர் படேல் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. இந்த நேரத்தில் அக்சர் படேல் (18) ஆட்டமிழக்க மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.
இறுதி ஓவரில் ரிஷி தவான் பந்துகளை வீணடிக்க, இந்திய அணியால் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் 2 ஓட்டங்களால் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. டோனி (19), ரிஷி தவான் (1) களத்தில் இருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக சிகும்புரா தெரிவு செய்யப்பட்டார்.