ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், தமிழர்களின் உணர்வுகள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளதை எடுத்துரைத்த முதல்வர், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது, ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்க வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,
‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றேன். அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முடிவும் எதும் எடுக்க முடியாது’ என அவர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களின் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் அணிதிரண்டு வந்து அறவழியில் போராடியது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது