ஜல்லிக்கட்டு போராட்டம் தள்ளிவைப்பு: மெரினா போராட்டக்காரர்கள் 2 மாதம் காத்திருக்க முடிவு

மெரினா போராட்டத்தை தள்ளிவைப்பதாக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் உரை, சட்ட வரைவு நகல் ஆகியவற்றை மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் போராட்டக் குழுவினரிடம் வழங்கினார்.

இந்நிலையில், போராட்டத்தைக் கைவிடுமாறு நடிகர் ராகவா லாரன்ஸ் இளைஞர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் லாரன்ஸ் கூறியதாவது:

”ஜல்லிக்கட்டுக்காகவே மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்றிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி.

ஜல்லிக்கட்டுக்காக போராடினோம். அதற்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது. ஆனால் இங்கு சிலர் வேறு விஷயங்களை பேசுகிறார்கள்.போராட்டத்தில் தேவையற்ற சிலர் நுழைந்தனர்.

எங்கள் போராட்டத்தின் போது தனி நபர்கள் மீதான தாக்குதலை ஒரு போதும் அனுமதிக்கவில்லை . மாணவர்களை தாக்கியதும், காவல் நிலையங்கள் தாக்கப்பட்டதும் வருத்தம் அளிக்கிறது” என்றார்.

இளைஞர்கள் கூறுகையில், ”ஆளுநரின் கையெழுத்து மற்றும் சீலிட்ட அவசர சட்டத்தின் நகல் எங்களிடம் வழங்கப்பட்டது. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளோம். அதுவரையில் இந்தப் போராட்டத்தை தள்ளி வைக்கிறோம்” என்று கூறினர்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கினார். இதனால், ஜல்லிக்கட்டு மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மதுரை புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் எனக் கூறிச் சென்றார். ஆனால், மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் வாபஸ் பெறவில்லை. ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்

மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பிறகும் இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts