ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்களில் சிலர் சமூகத்திற்கு விரோதமாக எதிராக நடந்து கொண்டார்கள் என்றும், இதனால் தான் மனதளவில் புண்பட்டு இருப்பதாகவும் ஹிப்ஹாப் தமிழன் என்று அறியப்படும் ஆதி ஒரு காணொளியில் கூறியுள்ளார். மேலும், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தன்னுடைய முகநூல் கணக்கில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட சம்பவம் குறித்து பேசிய ஆதி, போராட்டத்தின் போது சம்மந்தமே இல்லாமல் ஒரு குழு ஒன்று தேசிய கொடியை காலில் போட்டு மிதித்து அவமதித்துக் கொண்டிருந்ததாகவும், இந்த செயல்கள் தன்னை மிகவும் புண்படுத்தியததாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு இடத்தில் பேசிய நபர் ஒருவர் இஸ்லாமியர்களை மத்திய அரசு வஞ்சித்து வருவதாக தெரிவித்ததை சுட்டிக்காட்டிய ஆதி, ஜல்லிக்கட்டு என்பது இந்து முஸ்லிம் பிரச்சனை அல்ல என்றும், தமிழர் அடையாளத்துக்கான பிரச்சனை என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்ற பல பிரச்சனைகள் காரணமாக கோவை போராட்டத்திலிருந்து தான் பாதியிலே கிளம்பிவிட்டதாக கூறியுள்ள ஆதி, போராட்ட களத்தில் கருப்பு சட்டை அணிந்தபடி நுழைந்தவர்கள் திடீரென மோதி ஒழிக என்று கத்தியதாகவும், மற்றொரு இடத்தில் தனித்தமிழ் நாடு போல வரைந்து போராடிக் கொண்டிருந்தாகவும் கூறியுள்ளார்.
இதுமாதிரியான சம்பவங்களால்தான் புண்பட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பலர் எதற்காக போராடுகிறோம் என்பதை தெரியாமல் இருக்கிறார்கள் என்றும், இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு போராடி வந்த ஜல்லிக்கட்டு பிரச்சனை என்பது திடீரென தடம் மாறுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது என்றும் ஆதி குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிறைய மாணவர்கள் போராடிய போது ஜல்லிக்கட்டுக்காக நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல விதைத்து தற்போது காடு விளைந்த இடத்தில் இதுபோன்ற விஷ விதைகளை விதைப்பது என்பது தனக்கு உடன்பாடில்லை என்று ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தன்னுடைய புகைப்படத்தை வைத்து கொண்டு ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்திருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், போராட்டம் வேறொரு பாதையில் பயணிக்கிறதோ என்ற அச்சத்தில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்ல தீர்வை தானும் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் வெவ்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் மாணவர்களை திசைத்திருப்புகிறார்களோ என்கிற அச்சம் எழுவதாகவும் ஆதி அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு பிரச்சனையோடு வேறு எந்த பிரச்சனைகளையும் உட்புகுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் உணர்வு ரீதியாக காயப்பட்டிருப்பதாகவும், தான் அரசியலில் வர விருப்பமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.