ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று மவுன போராட்டம் நடத்தி வருகிறது. இதில் அஜித், சூர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் களத்தில் குதித்துவிட்டனர். குறிப்பாக, மாணவர்களின் எழுச்சி போராட்டம் தமிழகத்தை உலகளவில் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திரையுலகினரும் களத்தில் இறங்கியுள்ளனர். நேற்று திரையுலக கூட்டமைப்பு திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் மவுன போராட்டம் நடத்தி வருகிறது.
சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த போராட்டம் நடக்கிறது. மவுன போராட்டமாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோருடன் ரஜினி, அஜித், ஷாலினி அஜித், நாசர், சூர்யா, சிவக்குமார், ரகுமான், ஐசரி கணேஷ், சத்யராஜ், மோகன், பாக்யராஜ், பூர்ணிமா, அர்ச்சனா, சிவகார்த்திகேயன், பிசி.ஸ்ரீராம், த்ரிஷா, மன்சூரலிகான், விஷ்ணு விஷால், பார்த்திபன், ரூபா மஞ்சரி, விக்ரம் பிரபு, பொன்வண்ணன், சிபிராஜ், சாந்தனு, கோவை சரளா, விஜயலட்சுமி, பிரசன்னா, நந்தா மற்றும் நடிகர் சங்க பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கிறது. இன்னும் பல நடிகர், நடிகையர் பங்கேற்க உள்ளனர்.
இது மாணவர்கள் துவக்கி வைத்த போராட்டம். இதனால், மீடியாக்களின் கவனம் நடிகர்களின் உண்ணாவிரதம் நோக்கி திரும்பும். இது மாணவர்களின் போராட்ட உணர்வை சிதைக்கும் என்று பரவலான விமர்சனம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, மாணவர்களின் உழைப்பை திருடாதீர்கள் என்று நடிகர் சங்கத்திற்கு போராட்டாக்காரர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில் எங்கள் உண்ணாவிரத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம், டி.வி.சேனல்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் மீடியாக்கள் யாரும் நடிகர் சங்கத்தை முன்னிலைப்படுத்தவில்லை.