சிரேஷ்ட ஜப்பானிய ராஜதந்திரியான யசுசி அகாசி இன்று காலை சனாதிபதி மாளிகையில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
சனாதிபதி அவர்களும் திரு. அகாசியும் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்களைப்பற்றி கலந்துரையாடினர். அதில் நல்லிணக்க நடவடிக்கைகளும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளும் அடங்கியிருந்தன. இவ்வருட ஆரம்பத்தில் சனாதிபதி அவர்களின் கிழக்காசிய விஜயத்தின் போது திரு. அகாசி சனாதிபதி ராஜபக்ஷ அவர்களை ஜப்பானில் சந்தித்தார். இச்சந்திப்பை தொடர்ந்து ‘யுத்தத்திற்கு பிற்பட்ட இலங்கையின் அபிவிருத்தி மிகச் சிறப்பாக இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
அகாசி ஜப்பானில் இருந்தபோது ‘ஒவ்வொருவரும் தமது சொந்தப் பின்னணியில் இருந்து இந்நிலையை தீர்மானிக்கிறார்கள். அதனால்தான் இலங்கையைவிட அதிகமாக வளங்களை உடைய சில அபிவிருத்தியடைந்த நாடுகள் இலங்கையின் அபிவிருத்தியைப்பற்றி பொறுமை இழந்து கதைப்பது அநீதியானது’ எனக் குறிப்பிட்ட திரு. அகாசி ‘இது நியாயமானதல்ல, இது செய்யக்கூடிய விடயமும் அல்ல, நிச்சயமாக இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் மிக விரைவாக முன்னேறுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இலங்கை தனது வளங்களைக்கொண்டு மேற்கொண்டுள்ள அபிவிருத்தியைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதர் திரு.நொபுஹிட்டோ ஹோபோ அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு.கருணாதிலக அமுனுகம, ஜப்பானுக்கான இலங்கை தூதர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வசந்த கரன்னாகொட ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.