அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கான தடை நீக்கம் என்பதன் மூலம் நாட்டில் சுகாதாரம் தொடர்பான அவதானம் இல்லாது போய்விட்டதா? அல்லது வெளிநாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தவறான கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ள விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) நாமல் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமாகவே குறித்த கேள்வியினை எழுப்பியுள்ளார்.
மேலும், சுகாதார காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு தடைவிதிப்பதே சுகாதார அமைச்சராக இருந்த கடந்த காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நிலைப்பாடாக காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் அவர் ஏன் தற்போது அதே விடயத்திற்கு தடையை நீக்கியுள்ளார் எனவும் நாமல் கேள்வியை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யா அண்மையில் இலங்கைத் தேயிலைக்கு விதித்த தடையினை நீக்கிக்கொள்வதற்காகவும், ரஷ்யாவிடம் இருந்து சில வரப்பிரசாதங்களைப்பெற்றுக்கொள்ளவுமே அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு இலங்கையில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் புதன்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது “தேயிலைத் தடைக்கும், அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகள் தடை நீக்கத்திற்கும் தொடர்பு இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
மேலும், அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளில் உள்ள மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனத்தை அகற்றி உற்பத்திகளை மேற்கொள்ள ரஷ்யாவுடன் ஆலோசனைகள் மேற்கொண்டதன் பின்னரே இந்த தடைநீக்கம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் ராஜித தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.