யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலகத்தை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற இவ்வாறான போராட்டம் பெரும் களேபரத்துடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் முற்றுகைப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் 07ஆம் திகதி இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட முற்றுகைப் போராட்டம் பாரிய ஆர்ப்பாட்டமான உருவெடுத்ததினால் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்திற்கு அங்கவீனமான இராணுவச் சிப்பாய்கள் இலக்காகியதோடு இந்த விவகாரம் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரிதும் களேபரமாக ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினையில் தலையிட்ட ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் இதற்கு தகுந்த தீர்வை வழங்குவதாக எழுத்துமூல வாக்குறுதியை அளித்திருந்தனர்.
எனினும் இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தே அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய்கள் இன்றைய தினம் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தை ஜனாதிபதி செயலக வாயிலுக்கு முன்பாக அமர்ந்திருந்தவாறு ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய சக்தியின் செயலாளர் கே. சுகத் கருத்து தெரிவிக்கையில், “எமது ஓய்வூதிய பிரச்சினை விவகாரத்தில் தலையிட்டு தீர்வு தருவேன் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்த போதிலும், ஜனாதிபதியையும் ஏமாற்றிவிட்டு எமக்கான கொடுப்பனவை இதுவரை வழங்கவில்லை. குறிப்பிட்ட சில இராணுவச் சிப்பாய்களுக்கு இன்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். இந்த முறையை சிரேஷ்ட சிப்பாய்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலேயே ஜனாதிபதி தயாரித்துள்ளார். அதில் சிலருக்கு வெறும் 1500 ரூபாவாக காணப்படுகிறது. இந்த 1500 ரூபாவிற்கா நாங்கள் இவ்வளவு போராடுகின்றோம்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். அவருக்கு கீழ் எமக்கு யாரும் அவசியமில்லை. நாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்கவும் மாட்டோம் புதிய அரசாங்கத்தை உருவாக்கவும் மாட்டோம். எங்களுக்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லை. எங்களை யாரும் தூண்டிவிடவும் இல்லை. நாங்கள் நாட்டின் பக்கமே சார்ந்தவர்கள். 2014ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதியில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் எமக்கான ஓய்வூதியத்தையும், பணிக் கொடுப்பனவையும் வழங்குமாறு கோருகின்றோம். எமக்கான தீர்வு இல்லாவிடின் நாட்டிலுள்ள அனைத்து அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய்களும் இணைந்து நீதிமன்ற தடை உத்தரவு வந்தாலும் நாடளாவிய ரீதியில் போராட்டம் செய்வோம். எமது உயிரை தியாகம் செய்தாவது உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம். இப்படி உயிர்வாழ்வதை விடவும் மரணிப்பது எங்களுக்கு மேல்” என்றார்.