ஜனாதிபதி மைத்திரிக்கு உத்தியோக பூர்வ கடிதம் எழுதி சர்ச்சையில் சிக்கினார் சசிகலா

கச்சதீவு திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழகத் தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் எழுதியமையால் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார்.

இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்குகொள்ள அனுமதி அளிக்குமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இந்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலாவிற்கும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், உங்கள் கோரிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவின்படி, ஏற்கனவே 20 தமிழக மீனவர்களை அனுமதிக்க முடிவெடுத்திருந்த நிலையில், இப்போது 100 தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறி இருவருக்கும் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

இதன் மூலம் எந்தவொரு அரசாங்க பொறுப்பிலும் இல்லாத சசிகலா இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதோடு அது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Related Posts