நாட்டின் ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2010ம் ஆண்டுக்குப் பின் ஜனாதிபதி மோசடியான ஆட்சி ஒன்றை நடத்திச் சென்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பண்டாரநாயக்க கொள்கை இல்லாதொழிக்கப்பட்டது. அரசாங்க ஊழியர்கள் சுயமாக இயங்க முடியவில்லை. சாதாரண மக்களை மறந்து செயற்பட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்காக பெற்றோல், டீசல் விலையை குறைத்தார். ஆனால் அப்பாவி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டம் இல்லை. இன்று விவசாயிகள் நீரிழிவு நோயாளர்களாக மாறியுள்ளனர்.
விதை விலை அதிகம். களஞ்சியசாலை வசதி இல்லை. நீர் முகாமைத்துவம் இல்லை. உர பிரச்சினை உள்ளது. உற்பத்திகளுக்கு உரிய விலை இல்லை. ஜனவரி 8ம் திகதிக்குப் பின் அமையும் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். – இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.