தேசிய தைப்பொங்கல் விழாவிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு பற்றுவதற்காக இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார்.
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 14 ஆம் திகதி தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம் பெறவுள்ளது.
தொடர்ந்து அன்று மாலை, யாழ். மாவட்ட செயலக முகாமைத்துவ மற்றும் திறன் விருத்தி பயிற்சி நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும். யாழ்.பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமே இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளது.
மறுநாள் 15 ஆம் திகதி காலை செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.மாவட்ட ஒருகிணைப்புக் குழுக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ளது.
அன்று மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக, அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களும் யாழ்.வருகை தரவுள்ளனர்.
அத்துடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்துக்கான அழைப்புக்கள் விடுக்கப்படவுள்ளன. வடக்கு மாகாண திணைக்கள தலைவர்கள், செயலாளர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் ஆகியோரும் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு அழைக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.