ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்துப் பேசினார் ரமபோஷா!

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று திங்கட்கிழமை இரவு அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

mahinth ramposha

அலரி மாளிகையில் அவருக்கு ஜனாதிபதி விருந்துபசாரம் அளித்தார்.

முன்னதாக, சிறில் ராமபோஷா குழுவினர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினரை கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று மாலை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதேவேளை கொழும்பில் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த கையோடு வடக்கு வருகின்றார் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷ.

ரமபோஷ குழுவினர், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளனர். சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிரராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்தச் சந்திப்பு காலை 7.15 மணியளவில் கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகள், மீள்குடியேற்றத்தில் அரசு காட்டும் தாமதம், அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் நாட்டின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வலியுறுத்துவர் என்றும் தெரிவித்தார்.

கூட்டமைப்பினரைச் சந்தித்த பின்னர் இன்று பகல் விமானம் மூலம் வடக்கு வரும் ரமபோஷ குழுவினர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரைத் தனித்தனியாகத் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுடான சந்திப்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ஆகியோர் கலந்துகொள்வர்.

இச்சந்திப்பு ரில்கோ ஹோட்டலில் காலை 10.30 மணியளவில் நடைபெறும். இச்சந்திப்பின் போது வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்தும் வடக்கின் அபிவிருத்தி குறித்தும் பேசப்படும் என்று தெரியவருகிறது. அத்துடன், இங்கு போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் இந்தக் குழுவினர் பார்வையிடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts