ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உரையாற்ற அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பின் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று புதன்கிழமை (03) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Karunanithy-Desoo

இதில் பேசிய கருணாநிதி, ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த மாதம் 26ஆம் திகதி டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.

அதில் ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை உடனடியாக உருவாக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மற்றும் அந்த நாட்டு பிரதிநிதிகளை ஐ.நா சபையில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.

இலங்கை அரசு பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா விசாரணை குழு விசாரணையை தமிழ் நாட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத் தீர்மானங்களை வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் இன்று போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நூற்றுக்கணக்கான திமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து போராட வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி, ஆர்பாட்டத்தில் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts