ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலி. வடக்கு மக்கள் கடிதம்

கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். எனினும், எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் அவர் கூறிய ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடனிருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏமாற்றம் தந்துவிடாதீர்கள் என வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாகவுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் 87 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் எம்மை மீள்குடியமர்த்த அரசு தவறியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களுக்கு (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனக்கு) வாக்களித்தோம். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தருவீர்கள் என நம்பினோம். நீங்கள் ஜனாதிபதியாக வந்து ஒன்றரை வருடங்களாகியும் பெரியளவில் எந்த மாற்றத்ததையும் காண முடியவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் -21ம் திகதி எமது நலன்புரி முகாமுக்கு வந்த நீங்கள் ஆறு மாதங்களில் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தீர்கள். அதனை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். நீங்கள் அவ்வாறு கூறியிருந்த காலம் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. நீங்கள் குறிப்பிட்ட ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்யத்தவறின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலையைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. தயவுசெய்து எம்மை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்.

2013 ஆம் ஆண்டு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் முன்பாக நடத்தப்பட்ட உணவுத் தவிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களிடம் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க கூட தான் ஆட்சிக்கு வந்தால் அனைவரையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். அவர்கூட இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

முகாம்களிலுள்ள எமது மக்களின் நிலை பரிதாபகரமானது. 15 அடி நீளம், 16 அடி அகலம்கொண்ட ஒரு கொட்டகைக்குள் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் வசிக்க வேண்டியுள்ளது. மிருகங்கள் போல் வாழவேண்டிய நிலையே உள்ளது. உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலுமிருந்து நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நாய்க்குட்டி காவுவதைப் போல ஒவ்வொரு இடமாகவும் ஒவ்வொரு பாடசாலைகளுமாக மாறி எமது நிலை காட்டு வாசிகளின் நிலைக்கு மாறியுள்ளது.

சொந்த இடத்தில் வாழ விடுங்கள் என்றே நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். எமது நிலையைக் கருத்தில்கொண்டு முற்றுமுழுதாக மீள்குடியேற்றத்தைச் செய்வீர்கள் என நம்புகின்றோம் என்று மேலும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts