உலக தொழிலாளர் தினமான மே தினத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர்.
அர்ப்பணிப்பதே குறிக்கோள்: ஜனாதிபதி
‘2015இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே தினத்தில், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொண்ட வெற்றியினை யதார்த்த மாக்குவதற்கு அர்ப்பணிப்பதனை, எமது மே தினத்தின் குறிக்கோளாகக் கொள்வோம்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
உலகெங்கிலும் உள்ள பாட்டாளி மக்கள், மே தினத்தன்று தம் கரங்களில் ஏந்தும் சிவப்பு நிறக் கொடி, தொழிலாளர்கள் ஒற்றுமையினதும் தொழிலாளர் வெற்றியினதும் நீண்ட வரலாற்றைக் குறித்து நிற்கின்றது.
உலகவாழ் பாட்டாளி மக்கள் என்ற ரீதியில் நெற்றி வியர்வை சிந்திப் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி, மே முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. தொழிற்சாலையில், வேலைத்தளத்தில், பண்ணையில் அல்லது வேறெந்த இடத்திலும் வியர்வை சிந்தி தமது உழைப்பினை வழங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடும் பெருமூச்சு மற்றும் துயரம் ஆகியன, மே தினத்தின் உயிர்மூச்சாகக் கருதப்படுகிறது.
தொழிலாளர்களின் ஊழியம் எனும் சிறிய பற்களைக் கொண்ட சில்லுகளின் கூட்டுச் செயற்பாட்டினூடாகவே, உற்பத்தி எனும் பாரிய இயந்திரம் தொழிற்படுகிறது. உலகம் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு கட்டத்திலும், எவரேனும் ஓர் உழைப்பாளி சிந்தும் வியர்வை மற்றும் கண்ணீர் ஆகியன அடையாளமாக அமைகின்றது.
மே தினத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, இவ்வியர்வைக்கும் கண்ணீருக்குமே உலகம் தனது கௌரவத்தைத் தெரிவிக்கின்றது. மே தினத்தன்று வரிசைப்படுத்தப்படும் ஒவ்வொரு கொடியும், இரத்தத்தினால் உயிர்ப்பிக்கப்படும் ஆச்சரியம் நிறைந்த வியர்வை மற்றும் கண்ணீருக்கு நன்றி தெரிவிப்பதற்கே மேலுயர்த்தப்படுகிறது.
1956இல் நாம் வென்றெடுத்த மக்கள் வெற்றியின் பின்னர், எமது பாட்டாளி மக்களின் தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய வினைத்திறன் மிக்க பாதையில் நாம் இன்று தடம் பதித்துள்ளோம்.
ஒட்டுமொத்த பாட்டாளி மக்களினதும் வெற்றிகளும் உரிமைகளும் பாதுகாக்கத்தக்க ஒரு மே தினம் மலரட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை நலனுக்கு வித்திடும்: பிரதமர்
‘தொழிலாளர் வர்க்கத்தினருக்காகக் குரல்கொடுக்கும் தொழிற்சங்கங்கள், தமது அரசியல் தேவைகளை விட, வேலை செய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுவது, தொழிலாளர் வர்க்கத்தினதும் நாட்டினதும் நலனுக்குக் காரணமாய் அமையும். அதற்குத் தேவையான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பது அரசினது அபிலாஷையாகக் காணப்படுகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு, அனுப்பிவைத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
மே தினம், சமூக மேம்பாட்டுக்காக வியர்வை சிந்தி, ஊழியத்தை அர்ப்பணித்து, தமது பங்களிப்பினை வழங்குகின்ற வேலை செய்யும் மக்களின் தினமாகும்.
தொழிலாளர் வர்க்கத்தினர், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆற்றும் பணிக்கு நன்றியைத் தெரிவிக்கின்ற, அவர்களது ஊழியப் பங்களிப்பினை மதிப்பீட்டுக்கு உட்படுத்துகின்ற, அதற்கு உரிய பெறுமானத்தை வழங்குகின்ற, அவர்களது நலனுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற, அதற்கான ஒழுங்குமுறையான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின்ற ஒரு நாளாக மே தினத்தை மாற்றிக் கொள்வது, நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
தொழிலாளர் வர்க்கத்தின் வேலைத்தளப் போராட்டத்தைப் போன்றே வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றிகொள்ள, இந்த மே தினமானது புதிய உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதோடு, அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உரிமை போராட்டங்களை நினைவு கூரும் ஒரு தினமாகும்: எதிர்க்கட்சி தலைவர்
சர்வதேச தொழிலாளர் தினமானது தொழிலாளர்களினது கௌரவத்தையும் அவர்களது சாதனைகளையும் கொண்டாடும் தினமாக மட்டுமல்லாது, தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் நினைவு கூரும் ஒரு தினமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேதின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்நாளில் எமது நாட்டின் வளர்ச்சிக்காகவும் நலன்களுக்காகவும் அயராது உழகை;கும் நமது நாட்டின் தொழிலாளர் சமூகத்துக்கு எமது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த முக்கியமான நாளில், நாட்டை அபிவிருத்தி செய்யும் தங்களது பணிகளிலே ஒற்றுமையோடு செயற்படுமாறு அழைப்பு விடுப்பதோடு, சமூகங்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பினை உணர்ந்தவர்களாக பணியாற்றுமாறும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இத்தருணத்தில் தொழிலாளர் சமூகத்தின் கௌரவத்தையும் சுய மரியாதையையும் பாதுகாக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதோடு, அவர்களது நல்வாழ்வை உறுதி செய்யத் தேவையான கருமங்களையும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.
இறுதியான தமது குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் எண்ணத்துடன், மே தினத்தைக் கொண்டாடாமல் இலங்கையில் உள்ள உழைக்கும் சமூகத்தின் சாதனைகளை மதிப்பதன் மூலம் அவர்களது முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மே தினத்தை அனுஷ்டிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் மிகத் தாழ்மையாகக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.