ஜனாதிபதி, பிரதமரை முகப்புத்தகத்தில் மிரட்டியவர், ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், முகப்புத்தகத்தில் மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சுகத் குமார லக்மன, தான் மலேஷியாவில் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று, மலேஷியாவில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தன்னைக் கைதுசெய்து 5 நாட்கள் தடுத்துவைத்துப் பின்னர் இலங்கைக்கு அனுப்பியதாக லக்மன, ஊடகங்களுக்குக் கூறினார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு, இவரை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்தது.

இவ்வாறான குற்றத்தைத் திரும்பவும் செய்யக்கூடாது என லக்மனவை கடுமையாக எச்சரித்த கொழும்பு நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அவரை வழக்கிலிருந்து விடுவித்தார்.

‘நான் மலேஷியாவில் 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டேன். அது சட்டவிரோதமானது. இதனால் நான், எனது வேலையை இழந்து, எனது பிள்ளைகளுக்கு உணவு கூடக் கொடுக்க முடியாதுள்ளேன். இதனால் நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்தேன்’ என அவர் கூறினார்.

Related Posts