நல்லிணக்க அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் கூட்டமைப்புக்கும் வழங்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றவேண்டும். குறிப்பாக காலதாமதமின்றி மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சித் தலை வரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
இந்த வாரமளவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதியின் விஜயம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்புத் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்வதாகவே ஜனாதிபதியின் விஜயம் அமைந்திருந்தது. இதில் அவர் பல அறிவிப்புக்களைச் செய்வார் என்பது நியாயமாகாது. எனினும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் எமது மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக விரிவாக எடுத்துரைத்துள்ளேன். குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவித்தேன். மேலும் நல்லிணக்க அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப்போகின்றது.
இதுவரையில் எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காணிகள் விடுவிப்பு குறைந்தளவே நடைபெற்றுள்ளது. முழுமையாக விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட காணிகள் மக்கள் குடியிருப்பிற்கு ஏற்ற காணிகள் அல்ல. இந்நிலையில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். இனியும் இழுத்தடிப்புக்கு இடம் இல்லை. அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினேன்.
எமது மக்கள் ஜனாதிபதியின் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மக்களது பிரச்சினை தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் எமது மக்கள் தமது கோரிக்கையை முன்வைத்து போராடப் போவதாக எனக் கூறுகிறார்கள். இதனை மாற்றமுடியாது. அவர்க ளது கோரிக்கை நியாயமானது என்பதையும் அவருக்கு எடுத்துரைத்தேன்.
இதேவேளை, இந்த வாரமளவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றார்.