Ad Widget

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!!

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடபட்டது.

தமிழ் சிவில் சமூகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டது.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கு வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தெடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த்து.

இந்நிலையில், இரு தரப்பினர்களுக்கு இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், யதீந்திரா போன்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பமிட்டனர்.

Related Posts